வெள்ளி, 30 அக்டோபர், 2020

அடிபம்பு

 நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் ஒரு 80 களின் இறுதியில் இத்தகைய அடிபம்புகளை எனது கிராமத்தில் முதல் முறையாக மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக அமைத்துக் கொடுத்தனர். இத்தகைய அடிபம்பில் அடிக்கும் தண்ணீர் தான் எங்கள் கிராமத்து மக்களின் குடிநீர்க்கும், வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்துவார்கள். இதில் எனது அம்மா அடிபம்பில் தண்ணீர் அடிக்கப் போகும் போதும் எங்களையும் அழைத்துச் செல்வார். நானும், எனது அண்ணன் மற்றும் தங்கை போட்டிப் போட்டு சும்மா குதித்துக் குதித்து அடிப்போம். அதில் வயதானவருக்கு முடியாதவர்களுக்கு என்று உதவிகள் பல செய்யும் பண்புகளும் கற்கப்பட்ட இடம் என்றால் மிகையாகது.காலப் போக்கில் ஒவ்வொரு வீட்டிலும் போர்வல் மூலம் போர் போட்டு இயந்திர மோட்டார் மூலம் நீர் எடுக்கும் நிலை வந்தது. இன்று அதையும் தாண்டி கிராமத்தில் எல்லாம் ஒரு குடம் மினரல் வாட்டர் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் நிலையைப் பார்க்கும் போது மனத்திற்கு வேதனை தான். எத்தகைய இயற்க்கைச் சூழலில் வாழ்ந்த நம்மை குடிக்கும் தண்ணீரைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். இது எவ்வாறு நடந்தது, மினரல் வாட்டர் தான் நல்ல நீர் என்று எப்படி நம் மீது திணிக்கப்பட்டது. ஏன் காலம் காலமாய் குளத்திலும், கிணற்றிலும், அடிபம்பிலும் அடித்துக் குடித்த நாம் மாறக் காரணம் தான் என்ன? ஒரு சில ஆய்வு முடிவுகள் மினரல் வாட்டரால் கேன்சர் வரும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். நம் வீட்டில் அடிபம்பில், கிணற்றில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்கு முன்பு நமது அம்மா மார்கள் நன்கு குடத்தையோ, பானையையோ கழுவிப் பிடித்தார்கள். இந்த வாட்டர் கேன்களில் வீட்டிற்குத் தரப்படும் தண்ணீர் அவ்வாறு சுத்தம் செய்யப் படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தினமும் இயற்கை முறையில் தண்ணீர் பிடித்த நம்மை ஒரு மாதம் வரை சில சமயம் கேன் வாட்டரை வைத்துப் பயன்படுத்தும் ஒரு சிலரை எண்ணும் போது வேதனை தான் வருகிறது நாகரிகத்தின் வளர்ச்சியில் நாம் இழந்தது பழைய நினைவுகளை மட்டுமல்ல நம்மை அறியாமல் தினம் தினம் பருகும் மினரல் வாட்டர், சுவாசிக்கும் காற்றும், வித விதமாய் வரும் நோயும் தான் நாம் பெற்றது. இதற்குத் தீர்வுதான் என்ன? மனிதனுக்குத் தேவையான உணவு, காற்று, குடிநீர் போன்ற எந்த தேவையையும் நாம் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக, அவற்றைப் பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். வீட்டுக்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது நம் தமிழர் மரபு. ஆனால், இன்றைக்கு அந்தத் தண்ணீரே தரமில்லாததாக இருந்தால் என்ன செய்வது? தண்ணீர்... நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் நோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. மேலும், நாம் வாங்கும் கேன் தண்ணீர் தரமானதுதானா? என்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான குறைந்தபட்ச முயற்சியையாவது எடுக்கவேண்டும். இல்லையேல் நாம் குடிக்கும் நீர் நம் உயிருக்கு உலை வைக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக