சனி, 26 ஜனவரி, 2019

பெருமூச்சைப் பெற இன்னும் பல ஆண்டு ஆகும் போலயே

நம்முடைய பால்யப் பருவத்தில் காடு, மேடு, வயல், வரப்புகளில் ஓடியாடி வளர்ந்து. இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் நம் வாழ்க்கை போவது என்பது மூச்சடக்கி கபடி ரெய்டு செல்வது போல.சாம்பாத்தியமேனும் தொடுகோட்டைத் தாண்டி ரெய்டு முடிந்து தன் பக்கம் வந்தால் தான் பெருமூச்சு வரும் அந்தப் பெருமூச்சைப் பெற இன்னும் பல ஆண்டு ஆகும் போலயே நமக்கு ? 

நல்லவற்றை உபயோகிக்க முயற்சி எடுப்போமா?

இன்று நாம் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை பற்களை தேய்ப்போம்.என் சிறுவதில் தாத்தா, பாட்டி ஊருக்குப் போனால் வேப்பம் குச்சி, கருவேலம் குச்சி, சாம்பல், கோபால் பற்பொடி இவை தான் அவர்களின் பிரதான பல் விளக்குவதற்க்கு உபயோகப்படுத்துவார்கள். நானும் அவ்வாரு ஊருக்குச் சென்ற போதெல்லாம் பயன்படுத்தி இருக்கேன்.சில நேரத்தில் வேப்பம் கொழுந்து இலையே என் தாத்தா, பாட்டி சாப்பிடுவதைப் பார்த்து சாப்பிட்ட தருணமும் உண்டும். அவர்களின் பல் இன்றும் எழுபது வயது ஆகியும் ஆட்டு எலும்பை அசல்டா கடித்து சாப்புடுறாங்க .நாம அப்படியா இரண்டு முறை பல் விளக்கியும் என்ன பயன்? ஏகப்பட்ட பல் சம்பந்தமான பிரச்சனையை நாளும் நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வு தான் என்ன? . பழையபடி நம் முன்னோர்கள் பல் விளக்க பயன்படுத்திய முறைக்குத் தான் நாமும் மாறனும் போலயே. அத விட்டுட்டு இன்னைக்கு வரக்கூடிய பெஸ்ட்ல உப்பு இருக்கு, இனிப்பு இருக்கு, சாம்பல் இருக்கு, புதினா, கொத்தமல்லி இருக்குனு நம்மல நல்லா ஏமாத்திட்டு இருக்கானுங்க. ஆனா அயல் நாட்டுக்காரனுக்கு இங்கு இயற்கையா கிடைக்கின்ற வேப்பம் குச்சியை பாக்கெட் போட்டு நாம் வித்துட்டு இருக்கோம். நல்லவற்றை நாம் ஏற்றுமதி செய்து விட்டு கண்ட கண்ட பெஸ்ட்டை நாம் வாங்கி விளக்கிக்கிட்டு இருக்கோம் என்பது தான் உண்மை. நல்லவற்றை உபயோகிக்க முயற்சி எடுப்போமா? 

மழை

இன்று எல்லாம் மழை பெய்தால் நனையாமல் இருக்க ஒரு இடம் தேடுவோம். அன்று நம் சிறு வயதில் மழை வந்தால் அம்மா காய வைத்த துணிகளை எடுக்கப் போனதை விட காடு மேடல்லாம் அலைந்து திரிந்து என் பாட்டி வெட்டிக் கொண்டு வந்த விறகுகளை மழை வந்ததும் சிக்கிரமா வீட்டுக்குள் எடுத்து வைத்தது தான் அதிகம். மழை எங்களைப் போன்ற கிராமவாசிகளுக்கு கற்றுத் தந்த பலவற்றில் இவையும் ஒன்று. இன்றும் என் பாட்டி விறகு அடுப்பு தான் உபயோகிக்கிறார். எத்தனையோ முறை சிலிண்டருக்கு மாறச் சொல்லியும் மாறமல் இருக்கிறார்.

கல்லூரியில் ECE 5th Sem ல் friendship day கொண்டாடியதே யாராலும் மறக்க முடியாது

சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பு நம் கல்லூரியில் ECE 5th Sem ல் friendship day கொண்டாடியதே யாராலும் மறக்க முடியாது. அன்று நம் எல்லோரயும் கதிகலங்க வைத்து விட்டது. நண்பர்களுக்கு ஒரு சர்ப்பிரெஸ் தருவதற்காக யாருக்கும் தெரியாமல் குளிர்பானத்தில் பீர் கலந்து எல்லா மாணவர்களுக்கும் வகுப்பறையில் வைத்தே குடுக்க அது HoD & Principal வரை தெரிய மிகப் பெரிய பிரச்சனையே உண்டு பண்ணி விட்டது. சில நண்பர்களின் யோசனைப்படி நாம் அனைவரும் தெரிந்தே சாப்பிட்டோம் என்றால் சில நண்பர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற யோசனைப் படி நடக்க . அதற்காக நாங்கள் பெற்ற தண்டனை ஒரு மாத காலம் சஸ்பென்ட் & விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் விடுதியே விட்டு இரவோடு இரவாக வெளியேற்ற ப்பட்டனர். பல கட்ட விசாரணக்குப் பின்பு இரு நண்பர்களை கல்லூரியை விட்டே நீக்கி விட்டனர். யாரேக் காப்பாற்ற தியாகம் செய்தோமோ அது வீண் என்றே சொல்லலாம்.அந்த ஒரு மாத காலம் நமக்கு கற்றுக் தந்தது ஏறாளம். இதற்கு இடையில் மாணவ/மாணவிகள் போராட்டம் வேறு. மயங்கிய மாணவிகள் கலங்கிய மாணவர்கள் .மோந்து பார்த்துக் கண்டு பிடிக்க நீ என்ன மோப்ப நாயா ? இன்னும் பல. எனக்கு அன்றேக்குத் தான் தெரியும் friendship day யே. அது முதல் எனக்கு மாறக்காது. ஒவ்வொரு நண்பர்களின் & அப்பா / அம்மாக்களின் வலியை நமக்கு உணர்த்தியது.

அந்த அரிசி அண்டாவுல உள்ள கொஞ்ச அரிசியை வாயில் போட்டுக்கிட்டு

நம்மளுடைய சிறு வயதில் பள்ளிக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அந்த அரிசி அண்டாவுல உள்ளகொஞ்ச அரிசியை வாயில் போட்டுக்கிட்டு இன்னும் கொஞ்ச அரியை பாக்கெட்ல போட்டுகிட்டு விளையாட தெருவை நோக்கி ஓடியது இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது .அப்ப எல்லாம் அரிசியைச் சாப்பிட்டு வராத சக்கரை நோய் இப்ப வருதுனா உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதது தான். 

இத்தகைய எம் பாரம்பரியத்தின் மிச்சம் நம் கிராமத்துப் பெண்களிடம்

நம்முடைய கிராமத்தில் அம்மாக்களும்,மனைவிமார்களும் , தங்கை மார்களும், அக்காமார்களும் அதிகாலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக மாட்டுச் சாணம் கொண்டு வாலியில்உள்ள தண்ணீரில் நன்கு கரைத்து வாசல் தெளிப்பார்கள். காலப் போக்கில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் இன்று வெரும் தண்ணிர் கொண்டு வாசலைத் தெளிக்கின்றனர். இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது இத்தகைய எம் பாரம்பரியத்தின் மிச்சம் நம் கிராமத்துப் பெண்களிடம்.

சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு

சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கிராமத்தின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடுவாங்க. இன்றோ தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு மற்றும் கல்வியில் போட்டி என்கின்ற பெயரில் சும்மா வீட்டுப் பாடத்தை திணித்து விளையாட்டு என்பதே குழந்தைங்க மறந்துட்டாங்க. ஓடி ஆடி வீதியில் குழுவாக விளையாடியதை இனி கதைல மட்டும் தான் படிக்கனும் போல. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்கள் கபடி, சிலம்பாட்டம், பம்பரம், கோழிக் குண்டு, கிட்டி, திருடன் போலீஸ், பல்லாங்குழி,தாயம், கும்மி, பாண்டி, கண்ணா மூச்சி, குலைகுலையா முந்திரிக்காய் , கொழுக்கட்டை, நொண்டி இவை அனைத்தும் சிறுவர் & சிறுமியரின் விளையாட்டு. நம்முடைய இளமைக் காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்று வரை வாழ்க்கை விளையாட்டாய் இருக்கிறது. இன்று உள்ளசிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது என்பது வேதனைப் பட வேண்டிய விஷயம். இன்றைய பெற்றோர்களாகிய நாம் இத்தகைய ஆக்கிரமிப்புக்களை சிறுவர்களிடம் இருந்து அகற்றி விளையாட்டுக்களிலும் ஆர்வத்தை ஏற்படுத்த முனைவோம். முடிந்த வரை முயன்று வெல்வோம். உங்கள் முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கல்லூரி நாட்களில் படித்த நான்கு வருடமும் தவறாமல் என்.எஸ்.எஸ் Campக்கு செல்லுவது வழக்கம்

கல்லூரி நாட்களில் படித்த நான்கு வருடமும் தவறாமல் என்.எஸ்.எஸ் Campக்கு செல்லுவது வழக்கம். அந்த நான்கு வருடமுமே NSS Best Volunteer award வாங்கியது எனக்கு மகிழ்ச்சியே. அங்குதான் சமுதாய சிந்தனை மேலோங்கியது என்றால் மிகையாகாது. அங்கு தான் அடித்தட்டு மக்களின் நிலை அறியப்பேற்றேன். அங்கு 15நாட்கள் மாணவர்கள் தங்கி குளம், கோயில், சாலையோர சமுதாயக் கூடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி, அது போக இரவு நேரத்தில், கலை நிகழ்ச்சிகள் முலம் நம்முடைய பன்முகத் திறமையை வெளிப்படி த்தியது மற்றும் கிராம மக்களை மகிழ்வித்தது என்று இன்றும் கூட நம் கண்களை விட்டு அகலவில்லை. கல்லூரியில் Senior உடன் நன்கு பழகும் வாய்ப்பு. இதன் மூலம் நகரவாசிகள் கிராம சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளது , அதில் அவர்கள் படும் தூயரத்தை நம்மால் எளிதில் உணர முடிந்தது.



தட்டான் பூச்சி

நம்மளுடைய சிறு வயதில் நமக்கு முற்கள் குத்தினாலும் பரவாயில்லை என்று வேலிகளிலும், செடிகளிலும் அமர்ந்திருந்த இந்த தட்டான் பூச்சியை துரத்தி துரத்தி பிடித்து அதன் வாலில் சிறு நூல் கயிற்றைக் கட்டி பட்டம் பறக்க விடுவது போல் பறக்க விட்டு விளையாடுவதையும் ஒரு விளையாட்டா வைத்திருந்த அந்த கிராமத்து நாள் என்றும் மறக்க முடியாதவை.

சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியதை மறக்க முடியாது

நம்முளுடைய சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியதை மறக்க முடியாது. சுதந்திர தினத்திற்கு முந்தின நாளே சொல்லிருவாங்க அடுத்த நாள் கட்டாயம் காலை 8.00 மணிக்கு சுதந்திர தினத்திற்கு வந்து விட வேண்டுமென்று .. வரவில்லை என்றால் அவர்களை தனியாக கவனிப்பேன் என்று மிரட்டல் வேறு இருக்கும். அத்தகைய மிரட்டல் இல்லை யேன்றால் யாரும் வரமாட்டார்கள். இப்படிச் சொல்லித்தான் இப்படிப்பட்ட தேசபற்று விழாக்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அன்று ஆளாக்கப்பட்டு படிப்படியாக இத்தகைய நாட்டுப்பற்று திணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நாமே விருப்பத்துடன் இத்தகைய நிகழ்சியில் கலந்து கொண்ட நாள் மறக்க முடியாதவை. நமது பள்ளியில் கொடியேற்றியதைத் தொடந்து தரும் அந்த ஆரஞ்சு மிட்டாய், ஆசை சாக்லைட்,சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக் கொண்டு திரியும் போது நமக்கு தனி கர்வம் பிறக்குமே அதை மறக்கவே முடியாது. அதன் பிறகு நடக்கும் கலை நிகழ்ச்சியை மறக்க முடியாது. நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்றால் டிவியில் தலைநகரில் நடக்கும் அணிவகுப்புக்கு ஜனாதிபதி தலைமை தாங்கிய நிகழ்வு போயிக் கொண்டிருக்கும் அதைப் பார்காதவர் ஒருவர் கூட இருக்க முடியாது.அப்படி ஒரு நேர்த்தி இருக்கும். ஒன்றே ஒன்று இந்தநாளில்... இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்ற கேள்விகளை கேட்பதை தவிர்த்து இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று நினைப்போம். இரண்டு தலைமுறைக்கும் முன்னர், எல்லோரும் என்னென்ன கஷ்டங்கள் பட்டோம் என்று நாம் கொஞ்சம் சிந்திப்போம்.இந்த சுதந்திரம் நமக்குச் சும்மா வரவில்லை. எத்தனையோ இந்தியர்களின் கல்லறையில் தான் நமக்கு இந்த சுதந்திரம் எனும் பூ மலர்ந்திருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம். தேசப்பற்று மட்டும் நமக்கு இருந்தால் போதுமா? நாடு முன்னேற நாமும் நம்மாள் முயன்றத செய்யலாம் .நம்முடைய குழந்தைகளுக்கும் சுதந்திரதின சிறப்பை எடுத்துச் சொல்வோம். 

நம்முடைய காலத்தில் முக்கால் வாசி நண்பர்கள் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்திருப்போம்.

நம்முடைய காலத்தில் முக்கால் வாசி நண்பர்கள் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்திருப்போம். எங்கள் வீட்டில் இருந்து நான் படித்த பள்ளிக்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஆறாம் வகுப்பு வரை நண்பர்களுடன், அண்ணனுடன் என்று நடை தான். அதிலும் மழை பெய்து செங்குளம் கன்மாயில் தண்ணீர் நிறைந்து விட்டால் பள்ளிக் கூடத்திற்குக் சுற்றி தான் செல்ல வேண்டும். அது இன்னும் தூரம் அதிகம். இத்தகைய சூழலில் வாழ்ந்த நாம் இன்று நமது குழந்தை களுக்கு பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பது மட்டுமல்ல தன் வீட்டு வாசலிலே வந்து நிற்க வேண்டும், அதுவும் A/C வாகனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறு. பள்ளிக்குச் சென்றால் அங்கும் குழந்தைகளுக்கு AlC அறை. அப்ப அவர்கள் மீது சூரிய ஒளி படுவது எப்போது, உடற்பயிற்சி அறவே கிடையாது. இது அவர்களுக்கு மட்டுமல்ல என் போன்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் இதை நிலைமை தான்.அதற்காகத் தான் முடிந்த வரை அலுவலகத்திற்கு கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக சைக்கிளில் செல்லுகிறேன். எனது குழந்தையின் பள்ளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் என் வீடு. பள்ளிக்கு என் குழந்தை நடந்து தான் செல்லுகிறார். எனது பள்ளியின் தேர்வும் A/C இல்லா அறைகள் உள்ள பள்ளி தான். படிப்பும், பணம் சம்பாதிப்பதும் முக்கியம் தான் அதைவிட குழந்தை மற்றும் நம்முடைய ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்படுவோமா?

வியாழன், 24 ஜனவரி, 2019

தபால் பெட்டிகள்

இந்த தபால் பெட்டிகள் தான் அன்று நமது வாழ்வின் நிகழ்வுகளான மகிழ்ச்சி, சோகம், நம்முடைய பிரச்சனை,வேலை, பிறந்த நாள் வாழ்த்து மடல், திருமணம் என்று பலரது நிகழ்வுகளையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவல்களை கொண்டு சென்றதில் தபால் பெட்டியின் பங்கு அற்புதம். இது எல்லாம் ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய நிலை. என்று மொபைல் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வந்ததோ அப்போதே தபால் எழுதுவது குறைந்தது . நினைத்த நேரத்தில் பல ஆயிரம் தூரத்தில் உள்ளவர்களுடன் பேச வாய்ப்பு வந்தது. கேமரா மூலம் முகம் பார்த்து பேசும் வசதி, இணையம் மூலம் விண்ணப்பத்தல், எழுதுதல், படங்களை அனுப்பிப் பெருதல் என்று ஒரே அடியாக இந்த தபால் பெட்டி வீழ்ந்து விட்டது. என்ன தான் இதன் பயன்பாடு வீழ்ந்து விட்டாலும், இதைப் பயன்படுத்தி மகிழ்ந்த அந்த நாட்கள் நம் மனதை விட்டு அகலவில்லை என்பதை உண்மை.

திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் பொது நூலகம்

இது திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் பொது நூலகம்.இது 1875 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டதின் ஆட்சியராக இருந்த பென்னிக்டானால் துவக்கப்பட்டது. அன்றைய காலத்தில் இந்த நூலகம் எனது நண்பர் ஜாகிர் மூலம் தெரிய வந்தது. பத்தாம் வகுப்பு பரீட்சை விடுமுறையிலிருந்து நண்பர்களுடன் இங்கு சென்று பொது அறிவையும், உலக அறிவையும் வளர்ந்திடச் செய்த இந்த நூலகத்தை மறக்க முடியுமா என்ன. என்னைப் போல் எத்தனையா வசிப்பாளரை உறுவாக்கியது என்றால் மிகையாகாது. இந்த நூலகம் பல நூற்றாண்டு பொழிவுடன் இருந்து இன்னும் ஏராளமான அறிவு ஜீவிகளை உருவாக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.

ஜெயவிலாஸ்

நம்ம ஊரின் மிக அதிவேகப் பேருந்து.அனைவரின் விருப்பத்தேர்வு இந்த ஜெயவிலாஸ் பேருந்துந்தாகத் தான் இருக்கும். இந்தப் பேருந்திற்காக மணிக்கனக்காக காத்திருந்து ஏறக்கூடிய நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனுடைய சிறப்பு நேரம் தவறாமை .இளையராஜாவின் இன்னிசை மழை.அதில் பயணம் செய்யும் நமக்கோ பல்வேறு நினைவலைகளை நம் கண் முன்னே கொண்டு வரும் அதே வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. வாழ்க உங்கள் பணி.

இந்த வீட்டைப் பற்றி

இந்த வீட்டைப் பற்றி நிறைய எழுதலாம். நாங்கள் படித்து முடித்து விட்டு 2004ல் வேலை தேடி சென்னை வந்த போது என்னுடன் கல்லூரி மற்றும் பள்ளியில் பயின்ற நண்பர்கள் இங்கே தங்கி இருந்தார்கள். நான் அப்பப்ப இந்த வீட்டுக்குச் சென்று வருவேன். இந்த வீட்டின் சிறப்பே என்னேறமும் சோறு இருக்கும் (தண்ணிச் சோறாவது இருக்கும்). சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். இந்த வீட்டின் இன்னோரு சிறப்பு வேலையில் இருக்கக் கூடியவர்கள் வேலைஇல்லாதவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான செலவை ஏற்ப்பது. இப்பேற்பட்ட சிறப்புமிக்க வீடு கடந்த 14 வருங்களாக தொய்வின்றி அடுத்தடுத்து கல்லூரி முடித்து வந்த நண்பர்களுக்கு இந்த சேவையை வழங்கிய இந்த வீடு இன்று வீட்டு ஓனர் விட்டை காலி பண்ணச் சொல்லக் கூடிய நிலையில் உள்ளது ( வீட்டின் சில பாகம் இடியும் நிலையில் இருப்பதால்). இது உண்மையில் எல்லோருக்கும் மிகப் பெரிய வருத்தமே. இதற்கான அடித்தளத்தை இட்ட அண்ணன் ஜோதி, சந்தானம், அரவிந்த், வேல் முருகன், பாலு, M. K. செல்வராஜ் & ஜாகீர் அவர்களின் தியாகம் அளப்பரியது.

கல்லூரி வாழ்வின் முதலாம் ஆண்டில் இருந்து இறுதியாண்டு வரை கடந்து வந்த பாதையை உரையாற்றியது

இந்த புகைப்படத்தை என்னால் மட்டுமல்ல என்னுடன் பயின்ற அனைத்து நண்பர்களும் மறந்திருக்க வாய்பு இல்லை. கல்லூரி வாழ்வின் முதலாம் ஆண்டில் இருந்து இறுதியாண்டு வரை கடந்து வந்த பாதையை உரையாற்றியது.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசி இருப்பேன். அனைத்து நண்பர்களும் சிரித்து சிரித்து வாயும் வயிறும் கண்டிப்பாக புண்ணாகி இருக்கும்.

நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திவிர ரசிகர் எனது தந்தை .எனது சிறு வயதில் அதிகமான சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். வீர பாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கந்தன் கருணை, கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல், திருஞானசம்பந்தர் என்று அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.திரையில் பார்த்த நமக்கோ அந்தக் காலத்திற்குக் சென்ற ஒரு உணர்வு இருக்கும். குடும்பப் பாசத்தை மையமாக வைத்து அவர் ஏற்று நடித்த அத்துணை கதைகளும் அற்புதம். அதைப் பார்க்கும் நமக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுவார்.அவருக்கு நிகர் அவரே. அத்தகைய நடிப்பு திலக்தின் மணிமண்டபத்தை காண இன்று ஒரு வாய்ப்புக் கிட்டியது. இவ்வளவு பெரிய நடிப்புக்குச் சொந்தக்காரரான இவருக்கு ஒரு முறை கூட National award கொடுக்கப் படவில்லை என்பது வெட்கித் தலை குனியவேண்டும் நமது இந்தியஅரசு என்ற முனு முனுப் போடு மணி மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.

குளியல்

ஒரு பதிமூணு வயது வரை வீட்டில் குளித்த தாய்ச் சரித்திரமே இல்லை. உடனே மூக்கப் பொத்தீக்காதிங்க.80 மற்றும் 90 களில் குளியல் என்றாலே விவசாயக் கிணறு இல்லனா பம்பு செட்டு, குளம், கம்மாய், வாய்க்கால் என்று தான் குளியலிடங்கள். இவையேதும் இல்லாத ஊரில் வாழ்ந்ததும் இல்லை. அதிலும் பம்பு செட்டு ஒடும் போது தொட்டியில் இறங்கி கொஞ்சம் குளித்து விட்டு தலையே மெதுவாய் குழாயருகே கொண்டு போனால் கழுத்தை முறிக்கும் வேகத்துக்குத் தண்ணீர் தலையில் அறையும். அதிகாலையில் சிவப்புத் துண்டை மாலையாகப் போட்டுக் கொண்டு கிளம்பினால் குளிக்கப் போறோம் என்று அர்த்தம். நன்கு குளித்து அகோரப் பசியுடன் சிவந்த கண்களுடன் வீட்டுக்கு வருவோம். அப்புறம் நல்லா சாப்பிட்டு பள்ளிக்குக் கிளம்புவோம். அத்தகைய இளமைப் பருவம் ஒவ்வொரு வருக்கும் மகிழ்ச்சியான வாழ்நாள் பொக்கிஷம். அத்தகைய பொக்கிஷத்தை நானும் அனுபவித்து மகிழ்ந்திருக்கேன் என்பதில் எனக்குப் பெருமையே.

அன்று இன்ப துன்ப நிகழ்வுகளை சுமந்து வந்த இன்லேன்ட் லெட்டர்

அன்று இன்ப துன்ப நிகழ்வுகளை சுமந்து வந்த இன்லேன்ட் லெட்டர். எத்தனையோ முறை நானே என் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அம்மா & அப்பா மட்டுமல்ல உறவுக்காரர்கள் சொல்ல அதை எழுதும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அது எனக்கும் என் படிப்புக்கும் கிடைத்த பெருமை என்று எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். இன்று இணையத்தில் சுவாரசியமாக எழுத எனக்கு அடித்தளம் போட்டது அவர்களின் ஏதார்த்த பேச்சுக்களே. நான் பிறப்பதற்கு முன்பு என் அப்பாவிற்க்கும் & அம்மாவிற்கும் வந்த லெட்டரை படிக்கும் போது என்னை அறியாமல் கண்களங்கிய நாட்களும் உண்டு அத்தகைய கஷ்டத்தை கடிதத்தில் வடித்திருப்பார்கள். காலங்கள் பல கடந்தும் வாழும் நினைவலைகளில் இதுவும் ஒன்று. வேற என்ன நான் சொல்ல?

கரண்ட் போகும் போது

பாலிய பருவத்தில் இரவு நேரத்தில் ஒவ்வொரு முறையும் கரண்ட் போகும் போதும், திரும்பி வரும் போதும் நண்பர்களுடன் சேர்ந்து ஓ வென்று சத்தம் போட்டு சந்தோசப்பட்ட அந்த நாள் ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல வெளியில் அமர்ந்து அப்பா, அம்மா, அண்ணன்,தங்கை, அக்கா, நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்த நாட்கள் அற்புதம். இன்றோ கரண்ட் போனாலும் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இருக்கக் கூடிய இன்வெர்ட்டர் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. இன்றய தலை முறைக்கு இத்தகைய மகிழ்ச்சி அரிதாகி விட்டது .

ரேடியோப் பெட்டி

இந்த ரேடியோப் பெட்டியை மறக்க முடியுமா என்ன? என்னுடைய சிறு வயதில் இந்த வானொலிப் பெட்டி பல விந்தைகளை எங்கள் வீட்டில் நிகழ்த்தி இருக்கின்றது. சரோஜ் நாராயண சுவாமியின் செய்தி வாசிப்பு முடிவதற்குள் என் அப்பா வேலைக்குக் கிளம்ப வேண்டும், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலைக் கேட்டபடியே நானும், அண்ணனும், தங்கையும் சாப்பிட்டு நாங்கள் பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். இது தவிர்த்து விடியற்காலையில் இந்துஸ்தானிய இசை, வந்தே மாதரம், நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை, நாகூர் ஹனிபா வின் பாடல்கள், எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப் பாடல்கள், கேளுங்கள் தரப்படும் தட்டுக்கள் திறக்கப்படும் என்ற ஏசுநாதரின் பாடல்கள் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனதை மயக்கியவை. அதிலும் கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, வாயை மணக்கச் செய்வது கோல் கேட் டென்டல் க்ரிம் விளம்பரப்பாடல்,பாண்ட்ஸ் என்று பல பொருட்களின் விளம்பரம் மகிழ்சியாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளை வானொலியில் சொல்கிறார்களே என்று குதூகலமாக இருக்கும். வானொலியைக் கேட்டுக் கொண்டே பள்ளி பாடங்களை எழுதிக் கொண்டும் விவாதித்து கொண்டும் இருக்க முடிந்தது. இப்போது டிவி பார்த்துக் கொண்டு படிக்க முடியுமா ? ஞாயிறு என்றால் பகல் பன்னிரண்டு மணிக்கு சூரிய காந்தி நாடகங்கள். மூன்று மணிக்கு ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டே களிப்பை போக்கிய தருணம். இது போக பிரதமர் பேசினதும், விவசாயிகளுக்கு பல விவசாயம் சார்ந்த குறிப்புகள் , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மழை மற்றும் நம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற செய்தியும், அந்த கர கர சத்தத்தோடு கேட்டு மகிழ்ந்த அந்த நாள் காலத்தால் அழியாத அற்புதமான நினைவுகள் என்று சொன்னால் மிகையாகாது.

பேனா

நம்முடைய இளைமைப் பருவத்தில் பேனா டப்பா எல்லாம் வாங்கி தர மாட்டாங்க. ஒரே ஒரு பேனா தான் அதில் மை தீர்ந்தாலும் திரும்பவும் மையை ஊற்றி எழுதுவதும், நீப் உடைந்தாளும் வேற நீப்பை மாற்றியும், சுத்தமா பேனா உடைந்தா மட்டும் தான் நமக்குப் புதுப் பேனா வாங்கித் தருவாங்க. அது போல எழுதுகோள்களின் தரமும் நமக்கு மாற்றி அமைக்கப்படும். அதாவது நம்ம பால் வாடி படிக்கும் போது சுண்ணாம்பு குச்சியை வைத்து கரும் சிலேட்டில் எழுதினோம். அதன் பிறகு பென்சில் .பின்பு மை பேனா. இறுதியில் இங்க் பேனா.சின்ன வயசுல தவறு வந்தா திருத்திக்க முடியும்னு சுண்ணாம்பு குச்சியும், பென்சிலும் கொடுத்தாங்க போல.. வளர வளர மாற்ற முடியாதுனு பேனா கொடுத்தாங்க போல.பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுக்கு இங்க் பேனா கட்டாயம் என்று அன்று சொல்லப்பட்டது. அதிலும் இங்க் பேனா சிறிது காலம் நாம் எழுதிய பிறகு தான் நமக்கு அது பொருத்தமா இருக்கும்.மை திரவம் ஒழுங்கா வரவில்லை என்றால் நீப்பைக் கிறி விடுவோம்.அதிலும் மை டப்பாவை பள்ளிக்கு எடுத்து வர முடியாது. அதுனால சில நாட்கள் கடைக்குச் சென்று பத்து பைசாவுக்கு மை நிரப்பிக் கொள்வோம். அப்பொழுது பிரில், கேமல், காம்ளின் மை பிரபலமாக இருந்தது. அந்த மையை நிரப்ப ஒரு சிறிய கருவியும் இருக்கும். நண்பர்களிடம் மை கடன் வாங்குவதற்கு ஒரு சொட்டு மையை மேசை மீது வைத்தால் போதும். அதில் பேனாவின் நீட்பை வைத்தே உரிந்துவிட்டு எழுதிய நாள் மறக்க முடியாதவை.






நம்முடைய சிறு வயதில் பள்ளியில் நமக்கு விடக் கூடிய இடைவேளை நேரத்தில்

நம்முடைய சிறு வயதில் பள்ளியில் நமக்கு விடக் கூடிய இடைவேளை நேரத்தில் பள்ளியின் வெளியில் விற்ற இத்தகைய கடைகள் தான் அன்றைய காலத்தில் நமக்கு சூப்பர் மார்க்கெட்டும், ஷாப்பிங் மால்களும். அப்பொழுதெல்லாம் என்னுடைய அப்பா /அம்மா ஒன்றாம் வகுப்பில் ஒரு நாளைக்கு பத்து பைசாவில் தொடங்கி பன்னிரென்டாம் வகுப்பில் ஒரு ரூபாய் தருவார்கள். அவங்க தந்த அந்த காச வச்சுக்கிட்டு எதை வாங்கலாம்னு யோசித்துக் கொண்டே இத்தகைய கடை முன்னாடி நின்ன அந்த நாட்கள் அற்புதம் என்று அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இன்றோ சென்னை போன்ற பெரு நகரத்தில் அரசு பள்ளிகளைத் தவிர்த்து இத்தகைய கடைகளை காண்பது அரிதாகி விட்டது. இப்ப எல்லாம் பள்ளிகளை இடைவேளை நேரத்தில் அவர்கள் விருப்பப்படி Snacks தருகிறார்கள். அதற்கும் சேர்த்து பள்ளிகள் கட்டணத்தை வாங்கி விடுகிறார்கள். நம் குழந்தைகள் Snacks எதை சாப்பிட வேண்டும் என்பதையும் பள்ளிகளே முடிவு செய்யும் நிலைதான் இன்றைய மாணவர்களின் நிலை?

இடத்தை வாங்கி வீடு கட்டுவோமா?

எங்கள் திருவில்லிபுத்தூரில் உள்ள வீட்டில்,வீடு கட்டிய அளவிற்கு மேலாக இடம் விட்டு அந்த இடத்தில் தென்னை,தேக்கு, வேம்பு,அசோக மரம்,முருங்கை, வாழை, செம்பருத்தி, அவரைக்காய், சுரக்காய், கத்தரிக்காய், தக்காளி, கீரை வகைகள் என்று நானும், எனது அண்ணனும் போட்டி போட்டு செடியை வளர்ப்போம். அதுவும் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக அந்தச் செடி எப்படி இருக்கு, எவ்வாரு வளர்ந்திருக்கு என்று பார்க்க போயிடுவோம். அதற்குத் தண்ணீர் ஊற்றுவது, களையெடுப்பது என்று ஆர்வமுடன் வேலை செய்வோம். குளிக்கின்ற தண்ணிர், பாத்திரம் விளக்கும் தண்ணீர், துணிக்குச் சோப்பு போடும் தண்ணீர் என்று வரும் கழிவு நீரை வாய்க்கால் அமைத்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பாத்திய பிரிச்சு விடுவது. எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் தான் கருவேப்பிலை மரம் இருக்கும் அதைப் பறிப்பதற்கு எங்க வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் வருவார்கள்.எங்க விட்டுல முப்பது முதல் நாட்பது கோழி எப்பவுமே இருக்கும். அத்தகைய இயற்கைச் சூழலில் வாழ்ந்த நாம் இன்று சென்னை போன்ற பெரு நகரத்தில் வாழும் வாழ்க்கை நம் தலைமுறைக்கு இயற்கையோடு ஒன்றினைந்து வாழும் வாழ்க்கை முறை, விவசாயம் ஆகியவற்றை பல அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நாம் தங்குவதன் மூலம் சிதைத்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் பல அடுக்குமாடிக் கட்டிடத்தை வாங்குவதற்குப் பதிலாக இடம் வாங்கி அதில் வீடு கட்டுவதன் மூலம் நம் குழந்தைகளுக்கு நாம் கற்ற இயற்கைக்யோடு ஒன்றிணைந்த வாழ்க்கையை அவர்களுக்குக் கற்றுத் தரலாம். அவ்வாறான இடத்தை வாங்கி வீடு கட்டுவோமா?

எனது மகளுக்காக வாங்கிய சைக்கிள்

இந்த சைக்கிள் எனது மகளுக்காக இன்று வாங்கியது. மிகுந்த ஆர்வத்துடன் சைக்கிள் மிதிப்பதைக் கண்டு வியந்தேன். நாம் சைக்கிள் மிதிக்கக் கற்றுக் கொண்ட போது பத்து வயதுக்கு மேலே தான் இருக்கும். அதுவும் சொந்த சைக்கிளாக பல பேருக்கு இருக்காது என்பதே உண்மை.வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டிப் பழகிய காலத்தை மறக்க முடியாது. அதிலும் அப்பாவோட சைக்கிள் நமக்கு எட்டாவிட்டாலும் அதிலும் மிதித்த அனுபவம் நம் தலைமுறையாகத் தான் இருக்கும். குழந்தைகளுக்கு நாம் சொத்து சேர்ப்பதை விட ஆரோக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற என் அப்பாவின் வழியில் இன்று இதோ என் அன்பு மகளுக்காக....

புதன், 23 ஜனவரி, 2019

வாடகை வீடு

சென்னைக்கு வந்து சுமார் பதினாங்கு வருடங்கள் முடிவடைந்து பதினெந்தாவது வருடத்தை நோக்கிப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் இதுவரை ஐந்து வீட்டில் வாடகைக்கு இருந்திருக்கிறேன். அதில் மூன்று வீட்டில் மொத்தமாக சேர்த்து 13 (5+ 5+3)வருடங்களுக்கு மேல் தங்கி இருப்பேன். அந்த மூன்று ஓனருமேஅருமையாவைர்கள். இன்றைய காலத்தில் நாம் தான் வீட்டு உரிமையாளர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து. ஆனால் இந்த மூன்று பேருமே வாடகையை அவர்கள் உயர்த்தியதே இல்லை, மனிதனை மதிக்கும் பண்பு, உதவும் குணம், எளிமை, நான் என்ன அட்வான்ஸ் கொடுத்ததேனோ அதை வீட்டைக் காலி பண்ணும் போது அவர் அப்படியே கொடுத்து விட்ட பண்பு, உறவினர் வீட்டில் தங்க, அக்கம் பக்கத்தினரிடம் பேச, அசைவம் சாப்பிட எதிர்ப்புத் தெரிவிக்காத, சாதி, மதம் பார்க்காத,வெள்ளை அடிக்க அது இது என்று பணத்தை கறக்கும் இந்தக் காலத்தில் இப்படி யோரு அருமையான வீட்டு ஓனரை பார்ப்பது அரிது. நானோ அவருடன் பயணித்திற்கிறேன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். நண்பர்களே இன்றய வீட்டு ஓனர்களாகிய நீங்களும் இத்தகைய பண்பினைப் பின்பற்றி எதிர்வரும் சமுதாயத்திற்கு நாம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் .அந்த ஓனரின் பெயர் சந்திரசேகர் ( பெருங்குடி - ஐந்து வருடம்), அண்ணன் திருப்பதி (மேட்டுப்பாளையம் சைதாப்பேட்டை - ஐந்து வருடம்), தமிழ்மணி (பெருங்குடி - மூன்று வருடம் இன்னும் தொடர்கிறது).

செவ்வாய், 22 ஜனவரி, 2019

பாட்டி

இவங்க தான் என்னுடைய பாட்டி. எங்க அம்மாவோட அம்மா. மிகச் சிறந்த கடின உழைப்பாளி. எந்த வேலையாக இருந்தாலும் அசரமல் உழைக்கக் கூடியவர். பேரன் & பேத்தி மேல் அளவில்லா பாசம் கொண்டவர். எனது அப்பா என்னை, அண்ணன் & தங்கச்சியை கல்லூரியில் படிக்க வைக்க பொருளாதார சூழலால் தட்டுத்தடுமாறிய போது தாங்கிப் பிடித்து எங்களைப் படிக்கவைத்தவர். தனக்கென ஒரு ரூபாய் செலவு செய்ய ரொம்ப யோசிப்பவர் .சேமிப்பில் எறும்பு போன்றவர். தனது நான்கு வயதில் அம்மாவைப் பறிகொடுத்து தனது தம்பிக்கு ஒரு தாயாக இருந்து தான் படிக்கா விட்டாலும் தனது தம்பியை பள்ளியில் படிக்க வைத்தவர். அவர் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுவிட்டார் . எனது பாட்டியின் தியாகம் அளப்பறியது. ஒரு பெண்ணால் தனது தம்பியையும் பேரன் & பேத்தியையும் படிக்க வைத்து அழகு பார்த்த இவரை விட உலகத்தில் வேற என்ன சாதனையை நிகழ்த்தி விட முடியும்? 

வீடு

என்னுடைய அப்பா அரசு வேலையின் காரணமாக சொந்த ஊரில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு வந்து விட்டார். நான் ஒரு ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை திருவில்லிபுத்தூரில் வாடகை வீட்டில் தான் இருந்தோம். 1994ம் ஆண்டு என் தந்தை இந்திரா நகரில் வீடு கட்ட ஆரம்பித்தார். நானும் எனது அண்ணனும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமருக்கு அணில் உதவியது போன்று எங்கள் அப்பாவிற்கு நானும் எனது அண்ணனும் மணல் சலிப்பது, செங்கல், கலவையை எடுத்துக் குடுப்பது, கட்டத்திற்கு தண்ணிர் ஊற்றுவது, கட்டத்திற்குத் தேவையான தண்ணீரை அடி பம்பில் இருந்து அடித்து சைக்களில் வைத்து டிரம்மில் நிரப்புவது , எங்கள் அம்மா சமைத்த உணவை தாத்தாவுக்கும், வேலை செய்பவருக்கும் கொண்டு செல்வது என்று ஓடி ஓடி உழைத்த தருணம் இன்னும் கண்களில் நிழலாடுகிறது. அதனால் தான் என்னவோ அந்த வீட்டின் மீது பற்றுதல் அதிகமாக இருக்கிறது. நம் உழைப்பும், பங்களிப்பும், முழு ஈடுபாடும் அதில் இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த வீட்டை விற்கவோ, பளுதடைந்து விடவோ மனம் ஒவ்வாமல் இருக்கிறது.. அந்த வீட்டில் குழிகள் பல தோண்டி புதைக்கப்பட்டது மணல்களும், கற்களும் மட்டுமல்ல அதில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை இவர்களின் உழைப்பும், தியாகமும், எண்ணற்ற நினைவலைகளும் தான். அவைகள் தான் பணம், பெயர், புகழ் என்று சம்பாரித்து ஓய்வேடுக்கத் தோணும் முதுமை காலத்துப் பொக்கிஷங்கள்.இன்று நகரத்தில் வாங்கப்படுகின்ற பல அடுக்குமாடிக் கட்டத்தில் இத்தகைய நினைவலைகள் இருக்குமா என்றால் சந்தேகம் தான். இன்றைய தலைமுறையினர் கட்டும் வீடு நமது குழந்தையும் ஈடுபடுத்தி கட்டப்படுகின்ற வீடாக இருந்தால் அது நாம் அவர்கள் காலத்திற்கு வீட்டுச் செல்லும் மிகப் பெரிய பொக்கிஷம். இன்றைய தலைமுறையினர்களாகிய நாம் அத்தகைய வீட்டைக் கட்டலாமா?

இந்தப் புகைப்படத்தை என்னால் மறக்க முடியாது

இந்தப் புகைப்படத்தை என்னால் மறக்க முடியாது. என் குழந்தை பள்ளி விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்று நம்மால் பரிசு வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த போது,பெற்றோர்களுக்கான போட்டி ஒன்றை பள்ளி நிர்வாகம் அறிவித்தது அது என்ன என்றால் குழந்தையை பெற்றோர் கழுத்தில் வைத்துக் கொண்டு 100 மீட்டர் ஓட வேண்டும். அந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு என் குழந்தையிடம் நான்சொன்னேன் நீ வருத்தப் படாதே நிச்சயம் உன் தந்தை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உனக்கு பரிசு பெற்றுத் தருகிறேன் என்று. சொன்னவுடன் வந்ததே என் குழந்தையின் முகத்தில் மலர்ச்சி. அந்த முகமலர்ச்சிக்காக ஓடிய ஓட்டம், இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது. அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அதற்கான பரிசை குழந்தையோடு சென்று வாங்கிய போது என் குழந்தை பெற்ற மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை.



G. சொக்கலிங்கம் - பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால் இவரையும் இவர் தரும் ரெக்க மண்டேசனையும் கவனிக்கலாம்

இவர் பெயர் G. சொக்கலிங்கம். பங்குச் சந்தை பற்றி 2007ல் என்னுடைய அலுவலக நண்பர்கள் மூலம் அறியப் பெற்று சிறிது தொகையை Mutual Fund ல் இன்வெஸ்ட் பண்ணினேன். எனக்கு அப்போது நாணய விகடன் தவறாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அப்போதெல்லாம் நாணய விகடன் மாதம் இருமுறை வரும். இப்பொழுது வாரம் ஒருமுறை வருகிறது. இவருடைய கட்டுரை என்றால் நான் தவறாமல் படிக்கும் பழக்கம் எனக்கு. அப்படி ஒரு தெளிவான விளக்கமாக இருக்கும். வேல்யு இன்வெஸ்ட்மெண்ட் அப்படினா என்ன அதனால் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பலன் என்ன என பொருளாதாரம் தெரியாத எங்களைப் போன்றோருக்கு புரிய வைத்த பெருமை இவரையைச் சாரும். இவருடைய ரெக்க மண்டேசன் மற்றும் பங்குச் சந்தை சம்பந்தமான விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கும். இவரின் சிறப்பே டிரேடிங் மற்றும் F&O வை விரும்ப மாட்டார்.நான் பார்த்த வரையில் வேல்யு இன்வஸ்மெண்ட் அப்படினா இவர்தான் என்னுடைய பார்வையில் நம்பர் ஒன். நண்பர்களே யாராவது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால் இவரையும் இவர் தரும் ரெக்க மண்டேசனையும் கவனிக்கலாம். இல்லையென்றால் ஆண்டுக்கு 5000 ரூபாயில் பங்குச் சந்தை வேலை நாட்களில் தினசரி காலை ஒன்பது மணிக்கு பங்குச் சந்தை தொடர்பான முக்கிய தகவல்களும் ஒரு ரெக்க மண்டேசனயைும் தருவார். அவற்றை எந்த விலையில் வாங்க வேண்டும் & விற்க வேண்டும் என்பது முதல் தெளிவாகத் தருவார்..அவை அனைத்தும் இரண்டு முதல் ஐந்தாண்டு வைத்துக் கொள்வேன் என்பவர்கள் மற்றும் அதில் இணைந்து பயன் பெறவும். டிரெடிங் மற்றும் F&O பண்ண நினைப்பவர்கள் தயவு செய்து இவரே பின் தொடர வேண்டாம். Site -equinomics.in . இதை நான்உங்களுக்கு பரிந்துரைப்பதால் எனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய அனுபவத்தைநான் உங்களுடன் பகிர்கிறேன். சமீபத்தில் அவரே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது எடுத்த புகைப்படம். என் வாழ்வில் மறக்க முடியா மனிதர்.

என்னுடைய அலுவலகத்தில் 12 டாவது வருடத்தை நிறையு செய்யவுள்ளேன் ..

வரும் மே நான்காம் தேதியோடு என்னுடைய அலுவலகத்தில் 12 டாவது வருடத்தை நிறையு செய்யவுள்ளேன். கல்லூரி முடித்து இரண்டு வருட போராட்டங்களுக்குப் பிறகு சேர்ந்த முதல் கம்பெனி. அப்போது நான் இந்த அலுவலகத்தில் நான்காவது ஊழியன். முதல் மூன்று வருடங்கள் எனக்கு மாபெரும் சவால் நிறைந்ததாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆங்கிலப் புலமை, டைப் ரெட்டிங், unix, Linx, perl script,கணினியை உபயோகப் படுத்தும் வேகம் இவை அனைத்திலுமே ஆமை வேகம் தான். இவை அனைத்திலுமை கற்றுக் கொள்ள புத்தகம் மற்றும் பயிற்ச்சி வகுப்புகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு சிற்ப்பி சிலையைச் செதுக்குவது போல் என்னை ஒரு சிறந்த வேலைக்காரனாக எனது கம்பெனி செதுக்கியது என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக முத்து, சக்தி, ராஜசேகர், வினோத், வெங்கட், கோபால், ஆனந்தா, K.N. ராஜேஷ்,Hemi, Satish anand, Neel, Ann என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு வரும் எனக்கு பல்வேறு வகையில் என்னுடைய முன்னேற்றத்திற்கு உதவியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெறும் ஐம்பது உழியர்களோடு இருந்த எங்கள் கம்பெனியை இரு வேறு நிறுவனங்கள் கையகப்படுத்தி உலகம் முழுவதும் 8000 உழியர்களுக்கு மேலான smsc & MicrochiP நிறுவனத்துடன் இணைந்து ஆறு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் ஒருமுறை என்னை செதுக்கிய சிற்ப்பிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. 

முதல் முறையாக மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக அமைத்துக் கொடுத்த அடிபம்பு

நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் ஒரு 80 களின் இறுதியில் இத்தகைய அடிபம்புகளை எனது கிராமத்தில் முதல் முறையாக மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக அமைத்துக் கொடுத்தனர். இத்தகைய அடிபம்பில் அடிக்கும் தண்ணீர் தான் எங்கள் கிராமத்து மக்களின் குடிநீர்க்கும், வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்துவார்கள். இதில் எனது அம்மா அடிபம்பில் தண்ணீர் அடிக்கப் போகும் போதும் எங்களையும் அழைத்துச் செல்வார். நானும், எனது அண்ணன் மற்றும் தங்கை போட்டிப் போட்டு சும்மா குதித்துக் குதித்து அடிப்போம். அதில் வயதானவருக்கு முடியாதவர்களுக்கு என்று உதவிகள் பல செய்யும் பண்புகளும் கற்கப்பட்ட இடம் என்றால் மிகையாகது.காலப் போக்கில் ஒவ்வொரு வீட்டிலும் போர்வல் மூலம் போர் போட்டு இயந்திர மோட்டார் மூலம் நீர் எடுக்கும் நிலை வந்தது. இன்று அதையும் தாண்டி கிராமத்தில் எல்லாம் ஒரு குடம் மினரல் வாட்டர் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் நிலையைப் பார்க்கும் போது மனத்திற்கு வேதனை தான். எத்தகைய இயற்க்கைச் சூழலில் வாழ்ந்த நம்மை குடிக்கும் தண்ணீரைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். இது எவ்வாறு நடந்தது, மினரல் வாட்டர் தான் நல்ல நீர் என்று எப்படி நம் மீது திணிக்கப்பட்டது. ஏன் காலம் காலமாய் குளத்திலும், கிணற்றிலும், அடிபம்பிலும் அடித்துக் குடித்த நாம் மாறக் காரணம் தான் என்ன? ஒரு சில ஆய்வு முடிவுகள் மினரல் வாட்டரால் கேன்சர் வரும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். நம் வீட்டில் அடிபம்பில், கிணற்றில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்கு முன்பு நமது அம்மா மார்கள் நன்கு குடத்தையோ, பானையையோ கழுவிப் பிடித்தார்கள். இந்த வாட்டர் கேன்களில் வீட்டிற்குத் தரப்படும் தண்ணீர் அவ்வாறு சுத்தம் செய்யப் படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தினமும் இயற்கை முறையில் தண்ணீர் பிடித்த நம்மை ஒரு மாதம் வரை சில சமயம் கேன் வாட்டரை வைத்துப் பயன்படுத்தும் ஒரு சிலரை எண்ணும் போது வேதனை தான் வருகிறது நாகரிகத்தின் வளர்ச்சியில் நாம் இழந்தது பழைய நினைவுகளை மட்டுமல்ல நம்மை அறியாமல் தினம் தினம் பருகும் மினரல் வாட்டர், சுவாசிக்கும் காற்றும், வித விதமாய் வரும் நோயும் தான் நாம் பெற்றது. இதற்குத் தீர்வுதான் என்ன? மனிதனுக்குத் தேவையான உணவு, காற்று, குடிநீர் போன்ற எந்த தேவையையும் நாம் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக, அவற்றைப் பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். வீட்டுக்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது நம் தமிழர் மரபு. ஆனால், இன்றைக்கு அந்தத் தண்ணீரே தரமில்லாததாக இருந்தால் என்ன செய்வது? தண்ணீர்... நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் நோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. மேலும், நாம் வாங்கும் கேன் தண்ணீர் தரமானதுதானா? என்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான குறைந்தபட்ச முயற்சியையாவது எடுக்கவேண்டும். இல்லையேல் நாம் குடிக்கும் நீர் நம் உயிருக்கு உலை வைக்கும்.

நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்து ஊருக்கு கிளம்பும் போது சிறுவர்களின் கையில் ரூபாய் தருவது

நம்முடைய சிறு வயதில் நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்து ஊருக்கு கிளம்பும் போது சிறுவர்களின் கையில் ரூபாய் தருவது அப்போது வழக்கமாக இருக்கும். எனக்கு விபரம் தெரிந்த நாளில் எனது தாய் மற்றும் தந்தை சொன்னது இதுதான் யாரும் காசு குடுத்தால் வாங்காதே அவரிடமே திருப்பிக் கொடுத்து விடு என்று. அதையும் தாண்டி ஒரிரு முறை வாங்கி விட்டேன் என்னை என் தந்தை கடிந்து கொண்டார். எனக்கு ரூபாய் கொடுத்த உறவினர் அடுத்த முறை எங்கள் வீட்டிற்கு வரும் போது இது மாதிரியான பழக்கத்தை நிருத்துமாறு கூறினார். வீட்டிலே பணத்திற்குத் தட்டுப்பாடு வந்தபோது கூட அவர் யாரிடமும் பணம் கேட்கவும் மாட்டார். எனது அம்மா சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் தான் பல நேரத்தில் உதவியிருக்கிறது. இதைப் பார்த்து வளர்ந்ததால் என்னவோ 2004ல் வேலை தேடி நான்சென்னையில் தங்கி வேலை தேடும் போது ஒரு நேர்காணலுக்காக கே.கே நகர் வீட்டில் இருந்து வேளச்சேரி வந்த போது கையில் இருந்த பணத்தை தவறவிட்டுவிட்டேன் மதிய உணவும் சாப்பிடவில்லை, கையில் பணம் இல்லை, யாரிடமும் கேட்க மனமில்லை, அப்பொழுதெல்லாம் என்னிடம் செல்போனும் இல்லை. பிறகு என்ன செய்ய என்று வேளச்சேரியில் இருந்து கே.கே நகருக்கு வெயிலில் நடந்தே தான் சென்றேன். அந்த நடை எனக்கு உணர்த்தியது பணத்தை தவற விடாமல் விளிப்புடன் இருப்பது எப்படி என்பதைத் தாண்டி என் தாய். தந்தையர் கடைப்பிடித்த கொள்கையையும் என்னால் மிர முடியவில்லை. அதை இன்று ஏதார்ச்சியாக நினைத்துப் பார்த்தேன். என் தாய் தந்தையர் எனக்குச் சொல்லிக் காட்டிருந்தால் நான்மறந்திருப்பேன், அவர்கள் வாழ்ந்து காட்டியதால் என் சிறுவயதிலே ஆழ் மனதில் பதிந்து விட்டது.இன்றும்நான் அவர்கள் வழியில் வாழ்ந்து காட்டுகிறேன்.

களிமண்

சிறு வயதில் செங்குளம் கன்மாயில் இருந்து களி மண்ணை எடுத்துட்டு வந்து நண்பர்களுடன் களி மண்னை வைத்து இப்படி விளையாடிய அனுபவம் அற்புதம்.இன்றோ நமது குழந்தைகள் Play Doh வைத்து விளையாடினாலும் நம் காலத்து களிமண்னை வைத்து விளையாடியதற்கு ஈடாகாது. இல்லையா நண்பர்களே. 

பண்டிகை

எவ்வளவு அடி, திட்டு நாம் வாங்கினாலும் பள்ளிப் பருவம் தான் ஒவ்வொருவருக்கும் சிறந்த பருவம். பலர் நினைத்துப் பார்பதில்லை. அதை நாம் நினைத்துப் பார்த்தால் பல வசதிகள் இருக்கும் இந்தக் காலத்தை விட நம்முடைய இளமை காலம் சிறந்ததாக இருக்கும். அப்ப நாங்க செங்குளம் எனும் கிராமத்தில் வாடகை வீட்டுல இருந்தோம். சுற்றியும் எங்களைப் போல் பலர். விளையாடுவதற்கும், பேசுவதற்கும் நம் வயதிற்கு ஏற்றார் போல் நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக திரிவோம். அப்ப எல்லாம் எங்க வீட்டுல மண்ணெண்ணெய் அடுப்பு தான். அந்த அடுப்பை வைத்தே பல உணவுகளை செய்து தருவாங்க எங்க அம்மா. இன்று எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்ப எல்லாம் ரேசன் கடையில மிகப் பெரிய வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கிட்டு வருவாங்க. அப்ப விளக்குக் கூட ஒரு கண்ணாடி பாட்டிலில் மூடியில் திரியை சொருகி மண்ணெண்ணெய் மூலம்தான் எரியும். அதிலும் கரண்ட் கட் ஆச்சுன்னா எங்களைப் போன்ற பசங்களுக்கு அப்போதான் தீபாவளி. எல்லோரும் வெளியில் வந்து பேசுவாங்க, புத்தகத்தை எடுத்து வைச்சுட்டு நாங்களும் நிம்மதியாகிடுவோம். அது இருளில் வெளிச்சத்தைக் கண்ட அருமையான காலம். அவை அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. பலருக்கு அப்போ அவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இல்லை. ஆனா நாம் கலகலவென்று சிரித்து மகிழ்ந்து இருந்தோம்.என்ன பள்ளிக்குப் போகும் போது தான் கொஞ்சம் சினுங்கிகிட்டு போவோம். அதுவும் பண்டிகை வந்துச்சுன்னா வீட்டுல முருக்கு, அதிரசம், சுஸ்சியம், சீடை என்று அம்மாக்கள் கும்பல் கும்பலாக கூடிச் சேர்ந்து செய்து பக்கத்து வீட்டிற்கும் கொடுத்து மகிழ்வோம். இன்றோ கடனமக்குன்னு இனிப்புகளை கடையில வாங்கி பக்கத்து வீட்டுக்குத் தாராங்க. அப்ப இருந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கும், இப்ப நாம கொண்டாடுகிற முறைக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.