இந்த ரேடியோப் பெட்டியை மறக்க முடியுமா என்ன? என்னுடைய சிறு வயதில் இந்த
வானொலிப் பெட்டி பல விந்தைகளை எங்கள் வீட்டில் நிகழ்த்தி இருக்கின்றது.
சரோஜ் நாராயண சுவாமியின் செய்தி வாசிப்பு முடிவதற்குள் என் அப்பா
வேலைக்குக் கிளம்ப வேண்டும், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று
ஒரு தகவலைக் கேட்டபடியே நானும், அண்ணனும், தங்கையும் சாப்பிட்டு நாங்கள்
பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். இது தவிர்த்து விடியற்காலையில் இந்துஸ்தானிய
இசை, வந்தே மாதரம், நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை, நாகூர் ஹனிபா
வின் பாடல்கள், எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப் பாடல்கள், கேளுங்கள்
தரப்படும் தட்டுக்கள் திறக்கப்படும் என்ற ஏசுநாதரின் பாடல்கள் என்று
காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனதை மயக்கியவை. அதிலும் கோபால் பல்பொடி,
பொன்னான புதிய ரக்சோனா, வாயை மணக்கச் செய்வது கோல் கேட் டென்டல் க்ரிம்
விளம்பரப்பாடல்,பாண்ட்ஸ் என்று பல பொருட்களின் விளம்பரம் மகிழ்சியாக
இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளை வானொலியில் சொல்கிறார்களே என்று
குதூகலமாக இருக்கும். வானொலியைக் கேட்டுக் கொண்டே பள்ளி பாடங்களை எழுதிக்
கொண்டும் விவாதித்து கொண்டும் இருக்க முடிந்தது. இப்போது டிவி பார்த்துக்
கொண்டு படிக்க முடியுமா ? ஞாயிறு என்றால் பகல் பன்னிரண்டு மணிக்கு சூரிய
காந்தி நாடகங்கள். மூன்று மணிக்கு ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டே களிப்பை
போக்கிய தருணம். இது போக பிரதமர் பேசினதும், விவசாயிகளுக்கு பல விவசாயம்
சார்ந்த குறிப்புகள் , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மழை மற்றும் நம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற செய்தியும், அந்த கர கர
சத்தத்தோடு கேட்டு மகிழ்ந்த அந்த நாள் காலத்தால் அழியாத அற்புதமான
நினைவுகள் என்று சொன்னால் மிகையாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக