திங்கள், 21 ஜனவரி, 2019

எனக்கு பிடித்த நண்பன் 2 - சர்க்கரை ராசு

நண்பரின் பெயர் சர்க்கரை ராசு. அவரின் பெயருக்கு ஏற்றார் போல் அவர் கல்லூரி முடிக்கும் காலம் வரை அவரின் வாழ்க்கை சர்க்கரை போல் தித்தித்ததா என்றால் நான் பார்த்த வரைக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நண்பரால் மொத்த ECE பசங்களும் நல்ல மதிப்பெண் பெற்று அவர்கள் வாழ்க்கையை சர்க்கரைப் பொங்கல் போல் இனிப்பாக்கிய பெருமை நண்பரைச் சாரும். அவரின் வீடு மிகச் சிறியது. கல்லூரி படித்து முடிக்கும் காலம் வரை அவர் வீட்டில் டிவி கிடையாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அதில் தான் அவர் பொது அறிவு முதல் உலக அறிவைக் கற்றவர். அவரின் வீடு சிறியதாக இருந்தாலும் கல்லூரியில் பயின்ற முக்கால் வாசி நண்பர்கள் நண்பரின் வீட்டுக்கு வந்து அவரிடம் கற்றவராகத்தான் இருப்பர். படித்ததை மற்றவருக்குச் சொல்லித் தரும் மாண்பு எல்லோருக்கும் அமையாது. அது நம்ம நண்பருக்கு அமையப் பெற்றது அற்புதம். நண்பர் எங்களுடைய பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று, MIT, அண்ணா யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தும் அங்கு எல்லாம் சேராமல், எங்கள் கல்லூரியில் 289/300க்கு கட்டாப் எடுத்தவருக்கு டியுசன் பிஸ் கிடையாது என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் கல்லூரியில் ஸ்பான்சர்ஸ் மூலமாகச் சேர்ந்து படித்து கல்லூரிக்கும் பெருமை சேர்த்தவர். நமது கல்லூரிக்கும் இந்த நேரத்தில் மிக்க நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். அவர் ஒரு அமைதியானவர், கடின உழைப்பாளி, தன்னுடைய கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று வழியச் சென்று உதவும் பண்பு அற்புதம். அதுவும் அவர் அப்பா மற்றும் அம்மா என்னை மட்டும் மல்ல மற்ற நண்பர்களையும் கவனித்த விதம் இன்றும் நினைத்தாலும் கண் கலங்கும். அத்தகைய வருமையில் இருந்தாலும் வரும் நண்பருக்கு சாப்பாடு , டீ என்று அருந்தாமல் அனுப்ப மாட்டார்கள். கடின உழைப்பால் HCL மற்றும் ஜாஸ்மின் இன்போடெக்கில் வேலை பார்த்து அந்த சிறிய வீட்டிற்கு அருகில் மாளிகை போல் வீடு கட்டி தன் தாய் தந்தையரை பொக்கிஷம் போல் பார்த்துக் கொள்ளும் பண்பு அற்புதம். அவரே நான் பெருமைப்படுத்துவதில் நான் மட்டுமல்ல அவரால் பயன் பெற்ற நண்பரும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.

1 கருத்து: