செவ்வாய், 22 ஜனவரி, 2019

எங்கள் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பின் தாவரவியல்,விலங்கியல் ஆசிரியர் - ரெங்கமணி

இவர் பெயர் ரெங்கமணி. எங்கள் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பின் தாவரவியல்,விலங்கியல் ஆசிரியர். மிகவும் அருமையாக பாடம் நடத்தக் கூடியவர். பாடம் நடத்தும் போதே அவ்வப்போது தான் நடத்தியதில் இருந்து கேள்விகள் பல கேட்டு தூங்க விடாமல் மாணவர்களை விழிப்புடன் இருக்க வைத்து விடுவார். தாவரவியல் மற்றும் விலங்கியலைப் பொருத்தவரை நான் சராசரி மாணவன் தான் 36/50. அந்த ஐம்பது பேரில் என்னை ஒருவனை மட்டும் தேர்ந்தெடுத்து சனி மற்றும் ஞாயிற்குக் கிழமையில் தன் வீட்டுக்கு வரச் சொல்லி மீண்டும் ஒருமுறை எனக்குச் சொல்லிக் கொடுத்து, சில கேள்விகளுக்கு விடை எழுதச் சொல்லுவார்.இதற்காக என்னிடம் அவர் பணம் வாங்கியது இல்லை, அவர் எனக்கு உறவுக்காரரும் அல்ல, அவர் வீட்டிற்கும் எனக்கும் 5 கிலோ மீட்டர் இருக்கும்,அப்புறம் எதற்கு என்னை மட்டும் தேர்ந்தேடுத்து சொல்லித் தர வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல என்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களுக்கும் இத்தகைய கேள்வி எழும். எங்கள் பள்ளியின் 12ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் தாவரவியல் மற்றும் விலங்கியலில் நான் தான் முதல் மாணவன் 180/200. ஒரு சராசரி மாணவனாக இருந்து முதல் மாணவனாக உயர்த்தி அழகு பார்த்த ஆசிரியரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு நேற்று கிட்டியது. நான் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி இதுதான் எதற்காக என்னை மட்டும் தேர்வு செய்து பயிற்சி அளித்தீர்கள் என்று அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையோடு கடந்து சென்றார். ஒரு படத்தில் வடிவேலு நான் ஏதற்கு சரிப்பட்டு வர மாட்டேன் என்று குழம்புவது போல் .... இந்த விஷயத்தில் நானும் குழம்பினாலும் ... அவரின் நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

1 கருத்து: